தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள் பெல்சியத்தின் உணர்வெழுச்சியுடன் 05/10/2021 நினைவுகூரப்பட்டது. பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்பு தமிழீழ போராட்டத்தின் பெரும் தியாகங்களையும் , எதிரிகளின் கபட நாடகங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டி நிற்கின்றது. மூத்த தளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், எதிரியிடம் சித்திரைவதைப் படாமல் இலட்சிய உறுதியுடன் கொல்லும் சயனைட் வில்லையை உண்டு 05/10/1987 அன்று தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள். யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.) மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.) கப்டன் மிரேஸ் (தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட் அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட் தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.) இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா (இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.) போன்ற 12 வேங்கைகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டானர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாக திகழ்ந்தவர்களின் 34ம் வருட நினைவு வணக்க நிகழ்வு பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு பெரும் எழுச்சிமிக இன்று 05/10/2021 அன்வேர்ப்பன் மாநிலத்தில் தமிழீழ மக்களின் வருகையோடு உணர்வுபூர்வமாக இடம் பெற்றது. “ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.




