முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ம் ஆண்டு நினைவேந்தல் – பெல்சியம் 2021
2009 ம் ஆண்டு தமிழீழ மண்ணிலே சர்வதேசம் பார்க்கும் வகையில் எமது தமிழினம் கொத்துக்குண்டுகளும் போர்களத்தில் பாவனைகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நச்சுக்குண்டுகளின் திட்டமிட்ட இலக்கிற்கு உள்ளாகி பெரும் எண்ணுக்கணக்கில் சிங்களப்பேரினவாத அரசினால் கொல்லப்பட்டார்கள். மேலும் உயிர்காக்கும் உணவும் மருந்தும் தடைசெய்யப்பட்ட நிலையில் எமது உரிமைகளுக்காக இறுதிவரை களமாடியே எம்மக்களும் மாவீரர்களும் தம்மை அற்பணித்தார்கள், அந்தவகையில் எவ்வித நீதியும் இன்றி மேலும் மேலும் எம்மினம் ஒரு திட்டமிட்ட இன அடக்குமுறைகளுக்குள்ளும் இனவழிப்பிற்குள்ளும் வலியோடு அல்லலுறும் நிலையே இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை பறைசாற்றி நிற்கும் நினைவுச்சின்னங்களும் திட்டமிட்டே சிங்களப் பேரினவாத அரசினால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் புலம் பெயர் தேசங்களிலோ தமிழர்கள் மீள உருவாக்கி தமிழினவழிப்பிற்கான நீதியாக அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு என்பதனை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பியவண்ணம் இருக்கின்றது.
அந்தவகையிலே தமீழீழ விடுதலைப்போரில் தம்மை அற்பணித்த மாவீரர்கள் நினைவாக பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில் அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு பெரும் எழுச்சியாக மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியத்தின் தலை நகராகிய புருசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலினை நோக்கி நகர்ந்தது.
பி.ப 1.30 மணியளவில் இலக்கினை அடைந்து தமிழின அழிப்பின் ஆதாரங்கள் தாங்கிய பதாகைகளோடும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே எமக்கான ஒரே தீர்வு எனவும் கோசங்கள் எழுப்பி வாழிட மொழியில் பல்லினவாழ்மக்களுக்கு விளக்க உரையும் நடைபெற்றது. 2009 ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் எம் உறவுகளின் உயிர்காத்து தமிழின அழிப்பின் பெரும் சான்றாக விளங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவுகூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிங்களப்பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவும் தமிழர்களின் சுதந்திரமான தமிழீழ தேசத்தின் விடுதலையினை வலியுறுத்தவும் வேண்டி பெல்சிய நாட்டின் வெளி நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் எமது கோரிக்கை தாங்கிய மனுவும் ஒப்படைக்கப்பட்டது.
பெரும் நெருப்பை மிஞ்சிய தகிப்புடைய மே18 நாளில் எமது மக்களின் அவலங்களை தாங்கி மனித நேய ஈருருளிப்பயணம் புருசல் மாநகரில் இருந்து மீண்டும் அன்வேர்ப்பனில் அமைந்துள்ள தமிழீழ மாவீரர்கள் நினைவுக்கல்லறை நோக்கி புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு இலக்கினை அடைந்து பெரும் எழுச்சியோடு எமது விடுதலைப்போராட்டத்தினை நாம் மேலும் பற்றுறுதியோடு எவ்வித தடைவரினும் தமிழீழமே எமது விடுதலை இலக்கு என திடசங்கற்பம் பூண்டு நிறைவுற்றது.
“ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்”
-தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்






முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ம் ஆண்டு நினைவேந்தல் – பெல்சியம் 2021