அன்பார்ந்த தமிழ் உறவுகளே
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வேண்டியும் தமிழீழமே தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை பறைசாற்றி ஐக்கிய நாடுகள் அவையில் நடைபெற இருக்கும் 49ஆவது மனித உரிமைகள் ஆணைய கூட்டத் தொடரினை முன்னிட்டு மனிதநேய ஈருருளிப் பயண அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் பயணமானது 16/ 02/ 2022 அன்று இங்கிலாந்து நாட்டில் ஆரம்பித்து கடல் கடந்து நெதர்லாந்து அதன்பின் பெல்ஜியம், லுக்சம்பேர்க், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை கடந்து சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநகரத்தை வந்தடைந்தனர்.
18 நாட்களாக நடந்த இந்த ஈருருளிப் பயணம் ஒவ்வொரு நாடுகளையும் கடந்து வரும் பொழுது அங்குள்ள முக்கிய அமைச்சர்களை சந்தித்து தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு எனவும், நடைபெற இருக்கும் 49வது ஐநா சபை கூட்டத்தில் இவ் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்குமாறும் வாக்குறுதிகள் பெறப்பட்டன.
இறுதி நாளாக இன்று 7/03/2022 தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனிவா ஐ.நா.முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் மக்கள் அணிதிரண்டு நீதி கேட்டு உரத்தகுரலில் உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணம் போராட்டம் நடைபெற்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களின் கூற்றுடன் இந்த இருபத்தி நான்காவது மனிதநேய ஈருருளிப் பயண அறவழிப் போராட்டத்தை நிறைவு செய்வோம்.
“ நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது “
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.